சனி, 23 ஜூலை, 2016

ஆவனி 17




மறைக்கப்பட்ட மதுரைவீரன் வரலாறு
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
  அருந்ததிய தம்பதிகளான சின்னான் செல்லியின் மகன் வீரய்யன் மதுரையின் மாவீரனாக திகழ்ந்த காரணத்தால், வீரம் என்பது அரச குலத்திற்கு மட்டுமே வரும் என்ற பிம்பத்தை ஏற்படுததுவதற்க்காக, காசிராஜனின் மகனாக திருத்தி புகுத்தப்பட்ட மாவீரன் மதுரைவீரனின்
உன்மையான வரலாறை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டு மதுரைவீரன் பலியிடப்பட்ட நாளான ஆவனி 17-ஆம் நாளில் கோவை உக்கடம் பகுதியில் மதுரைவீரனின் உன்மை வரலாற்றை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளோடு அருந்ததியர்களின் பன்பாட்டு இசையான பறை மற்றும் ஜமாப் குழுவினருக்கான மாவட்டம் தழுவிய போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூக இயக்களில்  உள்ள இளைஞர்கள், தத்தமது இயக்க அடையாளங்களை முன்னிருத்தாமல் , அருந்ததியர் என்ற ஒற்றை அடையாளத்தோடு மட்டும் பங்கு கொள்ள வேண்டும் என்ற முன் நிபந்தனையோடு , மக்கள் பங்களிப்பிற்காக ஆயத்தக்கூட்டம் 21.7.16 அன்று உக்கடம் மதுரைவீரன் கோவிலில் நடைபெற்றது..
உன்மை வரலாற்று முன்னுரையுடன் நடைபெற்ற கூட்டம் வரும் 26.7.16 அன்று மீண்டும் கூடவுள்ளது..
 -என
உக்கடம் பகுதி இளைஞர்கள்..





வரலாற்றில் மாவீரர்களாக திகழ்ந்த அருந்ததிய ஆதித்தமிழர்கள்.



கொள்ளையர்களையும் , ஆதிக்க சாதி வெறியர்களாயும் அடக்கி , சாதியம் ஒழித்து சமூக விடுதலைக்கு அடித்தளமிட்டு சாதிமறுப்பு திருமணம் செய்து மறைந்த உலகம் போற்றும் மாவீரன் மதுரைவீரன்
மாவீரர் மதுரை வீரன்
அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் இந்து மதத்தை விட்டுப் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார். அவரைப் பின்பற்றி 5 இலட்சத்திற்கும் மேலானோர் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார்கள். அப்பொழுது 22 அம்சங்கள் அடங்கிய உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒன்று "பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். இது மக்களைத் திசை திருப்பும் செயலாகும். இத்தகைய பிரச்சாரம் விஷமத்தனமானது, தவறானது என நம்புகிறேன்" என்பதாகும். வரலாற்றை மாற்றி, திருத்தி எழுதி நம்ப வைக்கும் ஆரியரின், ஆதிக்கவர்க்கத்தினரின் சூழ்ச்சிகள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரலாற்று ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆரியர்களாகவும், ஆதிக்க வர்க்கத்தினராகவ
ும் இருந்ததால் தாழ்த்தப்பட்டோரின் வீர வரலாறுகளை மறைத்தும், திரித்தும் எழுதியதோடு வாய்மொழிக் கதைகள் மூலமும் மக்களை நம்ப வைத்து வந்துள்ளனர்.
மாவீரர் மதுரை வீரன் வரலாற்றையும் ஆதிக்க வர்க்கத்தினருக்கு சாதகமான கருத்துக்களை வாய்மொழிக் கதைகள், நாடகங்கள் மூலம் பரப்பி அனைவரையும் நம்ப வைத்து விட்டனர். அருந்ததியர் இனத்தில் அழகும், அறிவும், ஆற்றலும் நிறைந்த நல்ல உடல் வலிமையும், நற்பண்புகளும், சமயோகித புத்திக் கூர்மையும் உடைய வீரத்தளபதிகள் பலர் இருந்துள்ளனர். பூலித்தேவர் காலத்தில் ஒண்டி வீரன் தளபதியாகவும், பளையத்துத் தலைவராகவும், கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் ஆட்சி செய்தபோது முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை ஆகியோர் படைத் தளபதிகளாகவும், பளையத்துத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக, வாள், சிலம்புச் சண்டைகளில் கை தேர்ந்தவர்களாகவும், கொரில்லாப் போர் முறையில் எதிராளிகளை எளிதில் தாக்கும் வலிமை பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். கூத்து என்ற நாடகக் கலையில் சிறந்தவர்களாகவும், காடு, தோட்டம் கொண்டு செல்வாக்குமிக்கவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆற்றல் மிக்கவர்கள் அருந்ததியர் இனத்தவருள் இன்றும் கூட பல மாவட்டங்களில் சிலம்பு போன்ற வீர விளையாட்டுகள், நாடகக்கலைகள் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் ஏராளமாய் உள்ளனர்.
இன்று நிலவும் தாழ்ந்த நிலைக்கு காரணம் என்ன? அருந்ததியர் இனமக்களிடையே நிலவிய, இன்றும் நிலவும் ஒற்றுமையின்மை, தன்னைத்தான் உணராதது, தனக்குள் உள்ள ஆற்றலை உணராதது, அதற்கும் மேலாக ஆதிக்க சாதியினர் தனது பண்ணை, காடு, தோட்டங்களைக் கவனிக்கும் முழுப்பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்திருந்ததால் ஆதிக்க வர்க்கத்தின் சேவைக்காக முழுக் குடும்பத்தினரின் உழைப்பை ஆண்டு முழுதும் அர்ப்பணித்து இறுதியில் கிடைக்கும் தாணியம், கொஞ்சம் பணம் இவற்றிலேயே மனநிறைவு கொண்டவர்களாக வாழ்ந்து விட்ட பழக்கம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்க வைக்கும் எண்ணம் உருவாகாமலேயே வாழ்ந்து விட்டனர். அந்த எண்ணம் தோன்றும் சிலரையும் உன் பையன் படித்து என்ன கலெக்டராகவா போகப் போகிறான், பேசாம பண்ணையில் ஒழுங்கா வேலை பார்க்கச் சொல்லு என அடிமைப்படித்தி வைத்திருந்ததால் இன்றும் சிலர் அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாத நிலையில் சில ஊர்களில் உள்ளனர். கடவுளின் பெயரால் சொல்லப்படும் கருத்துகளை எளிதில் நம்பி ஏமாறுபவர்களாக, மீற மனம் இல்லாதவர்களாக, துணிவில்லாதவர்களாக மாறி, கடவுள் விட்ட வழி, விதி என்ற மனப்போக்கில் வாழ்வது. தனது முன்னோர்களின் வீர வரலாறுகளை அறிய முற்படாதது, அறிந்தவர்கள் வருங்கால சந்ததிகளுக்கு உணர்த்தாதது இவைகள் தான் அருந்ததியர் இனவீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
கதிரவன் மறைவதும் பின் தன் கதிர்களைத் பரப்பி உலகம் ஒளி பெறச்செய்வதும் இயற்கையின் நியதி. அதேபோல் வாழ்ந்தவர் வீழ்வதும், வீழ்ந்தவர் மீண்டும் எழ, வாழ முயல்வதும் உலக நியதி. அருந்ததியர் அடிமைக் குணத்திலிருந்து மீண்டு, தன்னை உணர வேண்டிய நிலையில் இன்றும் உள்ளனர். உலக மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வாழ்வில் எதிர் நீச்சல் போட்டு வாழ வேண்டிய அவசியத்தில் உள்ளனர். தனது முன்னோர்களின் வீர வரலாறுகளை அறிந்து துணிவும், போராட்ட குணமும் கொண்டு உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அருந்ததியர் இனம் காத்த மாவீரர் மதுரை வீரன் பற்றி அறிவோம்.
மாவீரர் மதுரை வீரன் காசி மன்னன் துளசிராயன் மகனாகவோ, வேறு எந்த அரசருக்கோ பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றியும் பிறக்கவில்லை. கழுத்தில் கொடி சுற்றிப் பிறந்ததால் குலத்திற்கு ஆகாது என சோதிடர் சொல்ல, பிறந்த குழந்தையைக் காட்டில் போட்டார்கள் என்பதோ, ஓடும் ஆற்றில் விட்டார்கள் என்பதோ எல்லாம் கட்டுக்கதை. காசியில் ஓடும் கங்கையும், திருச்சியில் ஓடும் காவிரியும் இன்றும் ஒன்றாக இணையவில்லை, சங்கமமாகவில்லை. பின் எப்படி காசியில் ஆற்றில் விட்ட குழந்தை, மூன்று நாட்களுக்குப் பின் சின்னான் கையில் கிடைக்கும். மற்றொரு கதையாய் காட்டில் கண்டெடுக்கப்பட்டதாய் சொல்வதும் பொய்யே. இவையெல்லாம் மதுரை வீரன் பிறப்பால் அரச குலத்தவன் என்பதால் தான் அவருக்கு வீரம், விவேகம், நல்ல குணம் இருந்தது என்பது போல் காட்ட ஆதிக்க சாதியினரால் புணைந்துரைக்கப்பட்ட கட்டுக் கதைகளேயாகும்.
மதுரை வீரன் 1608 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்த பாளையத்தில் பணி புரிந்த சின்னான் செல்லி என்ற அருந்ததியர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்து வீரய்யன் எனப் பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டவர். நல்ல அழகும், இளம் வயதிலேயே வீர விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுபவராகவும், புத்திக் கூர்மையுள்ளவராகவும் இருந்து, வளர்ந்து வாலிபனாக மாறும் போது அறிவும், ஆற்றலும், பிறர் நலன் நாடும் நல்ல பண்பும், உரிமைக்குரல் எழுப்பும் உயரிய சிந்தனையுள்ளவராகவும் இருந்தார்.
பொம்மண்ணன் மகள் பொம்மி பருவமடைகிறாள். அன்றைய வழக்கப்படி தனியாக வைக்கப்பட்டிருந்த பொம்மியை காவல் காக்கும் பொறுப்பு அருந்ததியர் சின்னான் அவர்கள் கடமையாகிறது. சின்னான் உடல் நலக்குறைவால் அவர் மகன் வீரய்யன் அப்பொறுப்பை ஏற்று காவல் காக்கிறார். இளமை உணர்வின் உந்துதலால் இருவர் உள்ளத்திலும் காதல் அரும்புகிறது. இருமனம் இணைந்து திருமணம் செய்ய இசைகிறது. கடுமையான சாதிக்கட்டுப்பாடுகள் இவர்கள் இணைவதைத் தடுக்கிறது. காதலை அறிந்த பொம்மண்ணன் கடுந்கோபம் கொண்டு வீரய்யனைக் கொல்ல திட்டமிடுகிறார். இதயறிந்த காதலர் இருவரும் வெளியேறுகின்றனர். இதனால் பொம்மண்ணன் வீரய்யன் இருவருக்கு மிடையே நடந்த கடும் சண்டையில் பொம்மண்ணன் மரணமடைகிறார். வீரய்யன் பொம்மியுடன் திருச்சி சென்று அங்கு ஆட்சி செய்து வந்த விஜய ரங்க நாயக்கர் படையில் சேர்ந்து தனது வீரத்தால், திறமையால் முன்னேறி மன்னரின் நன்மதிப்பைப் பெறுகிறார்.
மதுரையை ஆண்ட பிற்காலப் பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட அரசுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்தி டில்லி சுல்தான் அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூர் மதுரையின் மீது போர் தொடுத்து பாண்டிய சகோதரர்களின் ஆட்சியை இழக்கச்செய்கிறார். இதைத் தொடர்ந்து இஸ்லாமியர்களை விரட்டியடுத்து விஜய நகரப் பேரரசை நிறுவுகிறார்கள். தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களினால் கிருஷ்ண தேவராயர் வலிமைகிக்க நாயக்கர் மன்னராகிறார். பாண்டியர்கள் ஆட்சியின்போது பெருமளவில் போர் வீரர்களாய் இருந்த கள்ளர்கள் மாலிக்காபூரின் படையெடுப்பு, பின் வந்த நாயக்கர் ஆட்சிகளினால் கள்ளர்கள் படைப் பிரிவிலிருந்து ஒதுக்கப்படுகிறா
ர்கள். இந்நிலைகளினால் வாழ்க்கையில் மிகமோசமாக பாதிக்கப்பட்டு கள்ளர்கள் கொள்ளையடிக்கவும், வழிப்பறி செய்யவும் முற்படுகின்றனர்.
மதுரையில் ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் ஆட்சியின் போது பிறமலைக் கள்ளர்கள் அட்டகாசம் அதிகரிக்கிறது. அதை அடக்க ஏற்ற தளபதி தேவை என திருச்சி மன்னர் விஜய ரங்க நாயக்கரிடம் உதவி வேண்டினார். வீரய்யன் தான் இப்பணிக்கு ஏற்றவன் என திருச்சி மன்னர் வீரய்யனை மதுரைக்கு அனுப்புகிறார். வீரய்யன் தன் மனைவி பொம்மியுடன் மதுரையை அடைந்த பின் திருமலை நாயக்கர் வீரய்யனிடம் கள்ளர்களை அடக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். யாராலும் வெல்லமுடியாத, மதுரை மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்த சங்கிலி கருப்பன் என்ற கொள்ளையனை வென்று கொன்றதால் மகிழ்வுற்ற மன்னன் திருமலை நாயக்கன் வீரய்யனை படைபிரிவின் தலைவனாக நியமிக்கிறார். வீரனும் மிகத் திறமையாக இரவு பகலாக மதுரைக்கு பலத்த காவலை ஏற்படுத்திக் கிட்டத்தட்ட 4000 கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்கிறார். இதனால் மகிழ்ந்த திருமலை நாயக்கர் வீரய்யனை"மதுரை வீரன்" எனச் சிறப்பித்து பெருமைப்படுத்துகிறார்.
1634 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் படையெடுப்பு, 1635 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானத்தின் மீது போர் தொடுப்பு, நாஞ்சில் நாட்டைக் கைப்பற்ற ஆரல்வாய்க்மொழிக் கணவாய் வழியாக மலையாள மன்னர்கள் படையெடுப்பின் போதும் படைத்தலைவனாகப் பொறுப்பேற்று திருமலை நாயக்கருக்கு மகத்தான வெற்றியை பெற்றுத் தந்தார் மதுரை வீரன்.
இத்தகைய மாவீரர் மதுரை வீரனை தண்டிக்கும் அளவு திருமலை நாயக்கருக்கு கடுங்கோபத்தை உருவாக்கிய நிகழ்ச்சி தான் என்ன? ஆராய்வோம். திருமலை நாயக்கர் அவர் நினைவாக திருமலை நாயக்கர் மகால் கட்ட தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார். மகால், மண்டபங்கள் கட்டும் போது கட்டக் கட்ட இடிந்து கொண்டேயிருந்ததால் ஒரு சக்தி வாய்ந்த முனியின் வேலையென்றும் அதை விரட்ட வேண்டுமாயின் அம்முனி திருப்தியடையும் வரை நரபலியிட்டு விரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என சோதிடர் கூறியதை நம்பி மூட நம்பிக்கையில் மூழ்கிப்போன திருமலை நாயக்கர் ஆணையின் பேரில் நரபலி கொடுப்பதற்காக அருந்ததிய இனமக்களை கூட்டம் கூட்டமக சிறையிலடைத்து தூண்களை நிறுவும் போது நரபலி கொடுத்து வந்தனர். தூண்கள் உறுதியுடன் நின்று மண்டபங்கள் சாயாமல் இருக்க தொடர்ந்து நரபலி கொடுத்தபடி இருந்தனர். உயிருக்குப் பயந்து இவ்வினமக்களும் ஓரிடத்தில் தங்காமல் பல்வேறு இடங்களில் பாதுகாப்புத் தேடி சிதறினார்கள்.
அருந்ததியர் இனமக்களை அநியாயமாக நரபலியிடும் செய்தி அறிய நேர்ந்த மதுரை வீரன் துடித்துப் போனார். படைத்தலைவன் என்ற அதிகாரத்தால் அக்கொடுஞ்செயலை தடுத்து நிறுத்துகிறார். நரபலி தடுக்கப்பட்டு தனது பெயரால் கட்டப்படும் திருமலை நாயக்கர் மகால் பணியை நிறுத்தப்படும் செய்தி மன்னன் அறிகிறார். மன்னனின் மறைமுக ஆணை ஒரு படைத் தலைவனால் அதுவும் அருந்ததியரால் நிறுத்தப்படுவதா? பெருத்த அவமானமாக மன்னன் கருதுகிறார். எரிமலையாய்க் கொதிக்கிறது திருமலை நாயக்கர் உள்ளம்.
திருமலை நாயக்கர் சாதி ஆதிக்கத்தை, கொடுஞ்செயலை கண்டித்து உரிமைக்குரல் எழுப்புகிறார் மதுரை வீரன். மக்கள் செல்வாக்கும், படை வீரர்களின் ஆதரவும் மதுரை வீரரின் நியாயமான நிலைக்கு பக்கபலமாய் இருப்பதைக் கண்டு திருமலை மன்னன் திகைக்கிறார். மதுரை வீரரின் இன உணர்வோடு கூடியதும், சோதிடரின் சொல்படி யாரும் அறியாமல் மறைத்து செய்யப்பட்ட நரபலியை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே என்ற ஆத்திரம். இச்செயலை காரணக்காட்டித் தண்டிக்கப்பட்டால் மதுரை வீரன் பேரும் புகழும் அடைவதோடு தனது பெருமைக்குச் சிறுமையுமாகும் என்பதை எண்ணிப் பார்க்கிறான். தனது ஆணையை எதிர்த்து போராடத் துணிந்தவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது எனப் பொருமுகிறான் மன்னன். இச்சூழலில் மதுரை வீரனை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த பிறமலை கள்ளர்களால் மிகைபடுத்திக் கூறப்பட்ட மதுரை வீரன் மீது வெள்ளையம்மாள் கொண்ட காதல் விவகாரத்தை மனதில் கொள்கிறான்.
திருமலை நாயக்கர் சதித் திட்டத்தால் மதுரை வீரன் கைது செய்யப்படுகிறார். வஞ்சக எண்ணம் கொண்ட மன்னனால் நீதி விசாரணை எதுவுமின்றி இரவோடு இரவாக மாறுகால் மாறுகை வெட்டி மதுரை வீரன் கொலை செய்யப்படுகிறார். வெள்ளையம்மாளைக் கடத்திய குற்றத்திற்காக மதுரை வீரன் தண்டிக்கப்பட்டதாக மன்னரால் கதை கட்டப்பட்டு மக்களிடம் பரப்பப்படுகிறது. மதுரை வீரன் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவர் மனைவி பொம்மியும், அவரை இதயத்தில் ஏந்திய வெள்ளையம்மாளும் உடன் உயிர் துறந்தனர்.
தான் விரும்பிய வெள்ளையம்மாள், தன்னை விரும்பவில்லை மதுரை வீரனைத் தான் விரும்பியுள்ளாள் என்ற உண்மையும் தீர விசாரிக்காமல் தான் செய்த தவறையும் திருமலை நாயக்கர் உணர்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப்போல மதுரை வீரன் மரணத்தை எதிரொலிக்கும் விதமாக திருமலை நாயக்கர் ஒரு நாள் இரவு நகர்வலம் சென்றவர் சாமியார் மனைவியின் சதித்திட்டத்தால் எதிர்பாராதவிதமாக மன்னரின் உடல் ஒர் ஆழ்கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்படு
கிறது.
திருமலை நாயக்கர் மகாலில் 5 அடி விட்டத்தோடு 58 அடி உயரமுள்ள 248 தூண்களாகட்டும், அரண்மனை, நாடகச்சாலை கொண்ட சுவர்க்க விலாசம், ரங்க விலாசம், மண்டபங்கள் அனைத்திலும் அருந்ததியர்களின் ரத்தமும், வியர்வையும் நீராகப் பயன்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் மகால் என்பதை விட அருந்ததியர் நினைவாலயம் என்பதே சரியாகும்.
1608 ஆம் ஆண்டு பிறந்த மதுரை வீரன் தனது 21 வது வயது முதல் மன்னனால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 33 வயது வரை திருமலை நாயக்கருக்காக களம் பல கண்டு வெற்றி வாகை சூடித் தந்தவர். பிறமலைக் கள்ளர்களின் அட்டகாசங்களை அடக்கி மதுரையில் அமைதியை நிலவச் செய்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழை வாயிலில் காவல் தெய்வமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளார் எனில் மதுரை வீரரின் வீரமும், புகழும் என்றென்றும் மறுக்க, மறைக்க, மறக்க முடியாத ஒன்று என்பது மிகத் தெளிவானதாகும். பொம்மியைத் திருமணம் செய்து கலப்பு மணத்திற்கு வித்திட்டவர். சாதிப் பாகுபாட்டை எதிர்த்து, சமத்துவத்தை நிலை நாட்ட விரும்பியவர். ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். சாதி அடக்குமுறை, அடிமைத்தனத்தை எதிர்த்து புரட்சி செய்தவர். அருந்ததியர் இனத்தில் மாவீரர்கள் உண்டு என்பதையும், இன்று வரை வீரத்திற்க்கு எடுத்துக்காட்டாக அனைத்து மக்கள் மனதில் நின்று நிலைபெற்று இருப்பவர். அருந்ததியர்கள் நம் முன்னோர் பற்றிய வீர வரலாறுகளை உணர வேண்டும். மதுரை வீரனை சாமியாக்கிக் கள்ளூம், சாராயமும், கறியும், சுருட்டும் படைப்பதைத் தவிர்க்க வெண்டும். மாவீரர் மதுரை வீரன் நினைவைப் போற்றி வீர வரலாறுகள் படைப்போம்.
அறிவால் உயர்வோம்! ஒற்றுமை காப்போம்!!